தீண்டாமை. குடி அரசு - தலையங்கம் - 24.05.1931 

Rate this item
(0 votes)

உலகத்திலுள்ள கொடுமைகள் எல்லாவற்றையும் விட இந்தியாவில் மக்களை மக்கள் தீண்டாமை என்கின்ற இழிவு சம்மந்தமாக செய்துவரும் கொடுமையே மிகப் பெரிதாகிய கொடுமையென்றும். அதற்குச் சமானமாக வேறு எந்தக் கொடுமையையும் கூற முடியாதென்றும், எல்லா மக்களாலும் அரசியல் சமூக இயல் வாதிகளாலும் சொல்லப்பட்டு பொது மக்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயமுமாகும். ஆனால், அது விஷயத்தில் மாத்திரம் பயன்படத்தக்க வழியில் ஏதாவதொரு முயற்சியை இதுவரையில் யாரும் எடுத்துக் கொள்ளாமலே வெறும் வாய்ப்பந்தல் போடுவதினாலேயே மக்களை ஏமாற்றிக் கொண்டு காலங்கழித்து வருவதும் பிரத்தியட்சத்தில் தெரிந்த காரியமாகும். 

சமீப காலத்தில் இந்தியாவில் ஏற்பட்ட ஒரு சட்டமறுப்பு கிளர்ச்சியில் உப்புக் காய்ச்சுவது. வனத்தில் பிரவேசிப்பது, கள்ளுக்கடை மறியல் செய்வது. ஜவுளிக்கடை மறியல் செய்வது, என்பவைகள் போன்ற சில சாதாரணமானதும், வெறும் விளம்பரத்திற்கே ஆனதுமான காரியங்கள் செய்யப்பட்டு 40 ஆயிரம் பேர் வரையில் ஜெயிலுக்குப் போயும் அடிப் பட்டும் உதைபட்டும் கஷ்டமும்பட்டதாக பெருமை பாராட்டிக் கொள்ளப் பட்டதே தவிர இந்த மிகக் கொடுமையான தீண்டாமையென்னும் விஷயத் தைப்பற்றி எவ்வித கவலையும் யாரும் எடுத்துக் கொண்டதாகத் தெரிய வில்லை. இதற்குக் காரணம் ஒருசமயம் இது மேல்கண்ட மற்றவைகளைப் போன்ற அவ்வளவு முக்கியமான காரியம் அல்லவென்று அரசியல் காரர்கள் கருதியிருப்பார்களோ என்னவோ என்பதாக யாராவது சமாதானம் சொல்லக் கூடுமா? என்று பார்த்தால் அந்தப்படியும் ஒருக்காலும் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம். 

ஏனெனில் “தீண்டாமை மிக்க கொடுமையானது" என்றும், ”தீண்டாமை ஒழியாமல் இந்தியாவுக்குச் சுயராஜ்யம் வராது” என்றும், *வந்தாலும் நிலைக்காது” என்றும், உயர்திரு காந்தியவர்களே பல தடவை சொல்லியிருப்பதோடு இந்திய அரசியலில் தீண்டாமை விலக்கையே முக்கிய திட்டமாக வைத்து வேலை செய்ய வேண்டும்” என்றும் சொல்லி அரசியல் திட்டத்திலும் தீண்டாமை ஒழிப்பதற்கு பிரதான ஸ்தானமும் கொடுக்கப்பட்டிருக்கின்றது யாவரும் அறிந்ததாகும். 

இவ்வாரம் கூடிய சேலம் ஆதிதிராவிடர் மகாநாட்டில் தலைமை வகித்த ராவ்பகதூர் எம்.சி.ராஜா அவர்கள் தமது தலைமைப் பேருரையில் சொல்லியிருப்பது போல் அதாவது.

”1921 ம் வருஷத்திய காங்கிரசில் சுயராஜ்யம் பெறுவதற்கு தீண்டாமையை ஒழிக்க வேண்டியது முதற் கடமையாகும். சுயராஜ்யம் பெறுவதற்கு முன்னாலேயே தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டுமே யல்லாமல் அது சுயராஜ்யம் பெற்ற பிறகு செய்ய வேண்டிய வேலையல்ல" 

என்றும் தீர்மானித்திருப்பது மாத்திரமல்லாமல், சென்னையில் திரு, காந்தியவர்கள் ஒரு கட்டத்தில் பேசும் போது, 

*தீண்டாமை யென்னும் கொடுமையை ஒழிக்காவிட்டால் சுய ராஜியத்திற்கு வழியில்லை. சுயராஜ்யம் பெற மார்க்கமும் ஏற்படாது” என்றும் சொல்லியிருக்கின்றார்.. 

இந்தப்படி எல்லாம் திரு.காந்தியவர்கள் சொல்லியிருந்தும், மற்றும் காங்கிரஸ் திட்டத்தில் தீண்டாமையை முதல் திட்டமாக வைக்கப்பட்டு இருந்தும் காங்கிரஸ் இந்த விஷயத்தில் அதாவது தீண்டாமை ஒழிக்கும் விஷயத்தில் இதுவரை என்ன செய்திருக்கின்றது? 

உண்மையைக் கூறவேண்டுமானால் காங்கிரசானது இது வரையில் தீண்டாமை விலக்குக்காக யாதொரு வேலையும் செய்ய வில்லை என்று நான் தைரியமாய்க் கூறுவேன், காங்கிரசுக்காரர்கள் இந்து முஸ்லீம் பிரச்சினை ஒன்று மட்டும் தீர்ந்து விட்டால் போதுமென்று நினைக்கின்றார்கள், 

அன்றியும், "தீண்டாமை ஒழியாமல் எவ்வளவு விரிவான சுயராஜ்யம் பெரினும் அதை அடுத்த நிமிஷமே இழக்க நேரிடும்" என்றும், “சர்க்கார் நம்மை அடக்கி ஆளுகிறார்கள், நாம் தீண்டாதார் களை அடக்கியாள விரும்புகின்றோம். ஆகையால் சர்க்காருக்கும் நமக்கும் வித்தியாசமில்லை. ஆதலால் தீண்டாமை யொழியும்வரை நாம் சுயராஜ்யத்திற் கருகதை இல்லை" என்றும் சென்ற வருஷத்தில் கூட திரு. காந்தியவர்கள் சொல்லியிருக்கின்றார்" என்று பேசியிருக்கிறார். 

மேலும் திரு. M.C ராஜா பேசி இருப்பதாவது, மோதிலால் நேரு தீண்டாமைக்கு இந்துக்களே பொருப்பாளி கள் என்றும் லாலா வஜபதி, மாளவியா, ஜெயகர், சாப்ரூ முதலிய இந்துத் தலைவர்கள் “தீண்டாமையைவைத்துக் கொண்டு சுயராஜியம் கேட்பது ஒன்றுக்கொன்று முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவதாகும்"  எனவும் கூறியிருக்கிறார்கள், இவை தவிர இந்து மகா சபையும், 

*தீண்டாதார்களை கோவில், குளம், பள்ளிக்கூடம், கிணறு. ரஸ்தா ஆகியவைகளில் சமாடரிமை அனுபவிக்க உரிமை அளிக்க வேண்டும்" என்று தீர்மானம் செய்து இருக்கின்றது" 

என்றும் பேசிவிட்டு கடைசியாக பேசியிருப்பது என்னவென்றால் - 

41921-ம் வருஷத்திலும் 1928-ம் வருஷத்திலும் காங்கிரசுகளில் இது விஷயமாய் செய்த தீர்மானங்கள் எல்லாம் பிறந்த உடனேயே செத்துப் போய்விட்டது. மகாத்மாவும் காங்கிரஸ்காரரும் சர்க்காரை எதிர்த்து, உப்பு சத்தியாக்கிரகம் செய்ததில் ஒரு பகுதியையாவது. இந்து மகா சபையார் முஸ்லீம்களை எதிர்த்துப் போராடும் முயற்சியில் ஒரு பகுதியையாவது மேல்கண்ட தீர்மானத்தை அமுலுக்கு கொண்டுவர உபயோகித்திருப்பார் களேயானால் இந்த நாட்டில் சுயேச்சைக்கு பாதக மளித்து வரும் தீண்டாமைக் கொடுமை அடியோடு ஒழிந்து போயிருக்கும். இனியாவது மகாத்மா காந்தி இதை கவனிப்பாரா?” 

என்பதாக பேசி இருக்கின்றார். இந்தப்படி திரு.M.C. ராஜா அவர்கள் பேசி இருப்பதில் ஒரு சிறு எழுத்தையாவது எந்த காங்கிரஸ்வாதியோ அல்லது தேசீயவாதியோ ஆக்ஷேபிக்க முடியுமா? என்று பந்தயம் கூறி கேட்கின்றோம். 

தீண்டாமை ஒழிய வேண்டும் என்கின்ற விஷயத்தில் நாம் தீண்டா தார்களை தூக்கி நிறுத்திவிடப் போவதாக எண்ணிக்கொண்டு பேசுவதாக வும், அவர்களுக்கு நாம் வக்காலத்துப் பேசிவருவதாகவும் யாவரும் நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை என்பதாக தெரிவித்துக் கொள்ளு கிறோம். மற்றெதற்காக நாம் பாடுபடுகின்றோம் என்றால் அனேக விஷயங் களில் நாமும் அதாவது தீண்டாதார் அல்லாதார்கள் என்று கருதிக் கொண்டி ருக்கின்ற பார்ப்பனரல்லாதார்களும், தீண்டாதாராகவும் கிட்ட நெருங்காதாரா கவும் பாவிக்கப்பட்டு வருகின்றோமே என்கின்ற சுயமரியாதை உணர்ச்சி யினால் தான் என்றே தெரிவித்துக் கொள்ளுகின்றோம். 

ரயில்வே ஸ்டேஷன்களிலுள்ள இந்தியர்கள் ஓட்டலிலும், பொதுத் தெருக்களில் இருக்கும் காப்பிக்கடை, பலகாரக்கடை, சாப்பாட்டுக் கடை ஓட்டல்களிலும், கோவில், சில குளம் முதலியவைகளிலும், சில பொதுப் பள்ளிக்கூடங்களிலும், தீண்டாதாராகவே மதித்து ஒதுக்கப்படுகின்றோம் என்ற காரணத்தினாலேயே தான். 

கடுகளவாவது ஒருமனிதனுக்கு சுயமரியாதை இருந்தால் இந்த விஷயங்களெல்லாம் எந்த மனிதன் மனதுக்கும் கஷ்டமாகத் தோன்றாதா என்பதை சற்று யோசித்துப்பாருங்கள், 

உயர்திரு. சென்குப்தா அவர்கள் தென்னாட்டு சுற்றுப்பிரயாணத்தில் பல இடங்களில் காங்கிரஸ் சம்பந்தமாக பேசியதில், 

"அமரிக்காவில் நீக்கிரோவர்களை அமரிக்கர்கள் நடத்துவது காட்டுமிராண்டித்தனம் என்று கருதி இருந்தேன். ஆனால், இப்போது இங்கு வந்து பார்த்த பிறகு அமரிக்கர்களைவிட இந்த நாட்டில் பிராமணர்கள் தீண்டாமை விஷயத்தில் காட்டு மிராண்டித்தனமாய் நடந்து கொள்ளு கிறார்கள் என்பதாக உணருகிறேன்" என்று பேசியதோடு இந்த மாகாண காங்கிரஸ்காரர்கள் தீண்டாமை ஒழிக்கும் வேலையைவிட்டு விட்டு வேறு மறியல் வேலையிலும், கொடியெடுத்துக்கொண்டு திரியும் வேலையிலும் ஈடுபட்டிருப்பது காங்கிரசுக்கு அவமானம்' என்றும் சொல்லிக்கொண்டே வந்திருக்கிறார். இதை எந்தப் பத்திரிகையும் பிரசுரிக்க வேயில்லை. அது மாத்திரமல்லாமல் கோபியில் சில பார்ப்பனர்கள் திரு. சென்குப்தாவை பேச விடாமல் கூட்டத்தில் ஏதோ குழப்பம் செய்ததாகவும் தெரியவருகின்றது. 

நிற்க, திரு. சென்குப்தா அவர்கள் மற்றொரு கூட்டத்தில் பேசும் போது, 

“இந்திய காங்கிரஸ் பிரிட்டிஷாரை இந்திய இராணுவ மேற்பார்வை யை இந்தியர்கள் வசமே விட்டுவிட வேண்டுமென்று கேட்கின்றதே. அந்தப்படி ஒரு சமயம் இராணுவ சுதந்திரமும் இந்தியருக்குக் கிடைத்து விட்டால் ஒவ்வொரு இந்திய சிப்பாயிக்கும் இன்றைய நிலையில் ஒவ்வொரு சமையல் அறைகள் வேண்டியிருக்குமே. காங்கிரஸ் இதற்கென்ன செய்யப் போகின்றது? நாம் யுத்தத்திற்கு எத்தனை ஆள் சேர்க்கவேண்டு மோ அத்தனை ஆட்களுக்கும் தனித் தனி சமையல் அறையும்), சமையல் ஆட்களும் அல்லவா நமக்கு வேண்டியிருக்கும்? இந்தத் தொல்லையை வைத்துக்கொண்டு நாம் எப்படி இராணுவத்தை நடத்த முடியும்? " என்று கூட சொல்லியிருக்கிறார். 

சென்னை மாகாண காங்கிரஸ் வீரர்கள் வெள்ளைக்காரனைத் திட்டும் வரையில் கை தட்டி சிரித்துக்கொண்டும், தீண்டாமையைப்பற்றிப் பேசும் போது தலையைத் தொங்கப் போட்டு "பூமாதேவியுடன் இரகசியம் பேசிக் கொண்டும் இருந்தார்களே யொழிய அதைப்பற்றி சிறிது கூட கவலை செலுத்தினதாகத் தெரியவில்லை. 

 

இவை ஒருபுறமிருக்க, சென்னை மாகாண பார்ப்பனர்கள் இப்போது புதிதாக ஒரு முயற்சி செய்து வருகின்றார்கள். அதென்னவென்றால் தீண்டாதார்களை நகரங்களுக்குள் கக்கூசு எடுக்கப் போடுவதால் பிராமணர் கள் சரியாய் நடமாடுவதற்கில்லாமல் தீட்டுப்படுகின்றார்கள் என்றும், ஆதலால் ஜாதி இந்துக்களில் பார்ப்பனரல்லாதாரை மலம் எடுக்க முனிசிபா விடியார் நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறார்கள். 

ஆகவே இவைகளுக்கெல்லாம் இப்பொழுதுதான் ஆகட்டும் இந்திய தேசீய காங்கிரசுக்கோ உயர்திரு. காந்திக்கோ , வீரர் ஜவர்லால் நேருவுக் கோ உண்மையில் தீண்டாமை ஒழிய வேண்டுமென்கின்ற கவலையும் ஆசையும் இருக்குமானால் இந்த யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் பயனாய் ஏற்பட்ட ஓய்வு காலத்தை இந்தத் தீண்டாமையை ஒழிக்கும் வேலையில் செலவிடும்படியான ஏற்பாட்டை ஏன் செய்யக்கூடாதென்று தான் கேட் கின்றோம். 

இந்தப் பெரிய சர்வாதிகாரிகளான ஏக தலைவர்களுக்கு ஒருசமயம் வேறு முக்கியமான அதாவது இந்து முஸ்லீம் கிறிஸ்தவ ஒற்றுமை வேலை. கள் இருப்பதாக வைத்துக் கொண்டாலும் சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர்களும் வீரர்களும் தொண்டர்களுமாவது ஏன் இந்த வேலையில் தங்கள் ஓய்வை செலவழிக்கக்கூடாது என்றும்தான் கேட்கின்றோம். 

இவ்விஷயம் இப்படியெல்லாம் இருந்தும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் உயர்திரு. C. ராஜகோபாலாச்சாரியாரின் பண வசூல் விண்ணப்ப வெளியீட்டில் ஹிந்தி பிரசாரம் செய்வதை பிரமாதமாக குறிப்பிட்டிருக் கிறார்களேயொழிய தீண்டாமை விலக்கைப் பற்றி ஒரு வார்த்தையும் கூட அதில் குறிப்பிடவில்லை. தீண்டாமையின் தாண்டவமும், அதன் தொல்லை யும் இவர்களுக்கு தெரியாதா என்றும் கேட்கின்றோம். இந்த சமயத்தில் இந்தப்படியாக நாம் ஏன் கேட்கின்றோம் என்றால் தியாகிகளும், சமதர்மக் காரர்களும் என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் காங்கிரஸ் வீரர்கள் *காங்கிரசினால் தான் தீண்டாமை ஒழிக்கப்படுமே யொழிய மற்றபடி வேறு எந்த வழியிலும் முறையிலும் தீண்டாமை ஒழிக்கப்பட முடியாது" என்று சொல்லுவதன் மூலம் அந்தத் துறையையும் தங்களுக்கே சொந்தமாக்கிக் கொள்ள முயற்சிப்பதால் மற்றவர்கள் இவ்விஷயத்தில் செய்யும் காரியங் களுக்கும் இடையூறும் முட்டுக் கட்டையும் உண்டாகும் படியான சூரிகள் செய்வதால் நாம் எழுதவேண்டி நேரிடுகின்றதேயொழிய வேறில்லை. எப்படி இருந்தாலும் இந்த சமயமானது இந்தக் காரியத்திற்கு அதாவது தீண்டாமை ஒழிப்பது என்பதற்கு மிக்க அனுகூலமான சமயம் என்றே சொல்லலாம். எப்படியெனில் ஏதோ ஒரு வகையில் சுயமரியாதை இயக்கம் செய்துள்ள கிளர்ச்சியாலும், தீண்டத்தகாதார் என்னப்பட்ட சமூகத்தாருக்கு ஏற்பட்டுள்ள தீவிர உணர்ச்சியாலும் பொது ஜனங்களுக்குள் ஒருவித பரபரப்பு ஏற்பட்டிருப்பதுடன் எதிர்ப்புக்கு அதிக மரியாதை இருக்காது என்பதாகவும் தோன்றுகின்றதுதான். ஆதலால் காங்கிரசில் உள்ள பார்ப்பனரல்லாத தலைவர்களும், தொண்டர்களும் தனியாகக் கூடியாவது, இந்த சமயத்தில் மற்ற ஸ்தாபனக்காரர்களையும் கலக்கிக்கொண்டு ஏதாவது ஒரு முயற்சிக்கும் முந்துவார்களாக. இந்த நிலையில் தீண்டப்படாதார் என்பவர்களும் தகுந்த படி கிளர்ச்சி செய்தோ அல்லது தீண்டாமைக்கு ஆதாரமான இந்து' மதத்தை விட்டுவிடச் செய்தோ தங்களின் இழிவுகளையும் கொடுமைகளை யும் ஒழித்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டுமென்றும் வற்புறுத்து கின்றோம். 

தீண்டாதார் என்பவர்களில் ஆங்கிலம் படித்தோ அல்லது செல்வம் படைத்தோ உத்தியோகம் நியமனம் முதலியவைகளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களால் தீவிரமான முயற்சிகள் எதுவும் செய்யப்படும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் ஆங்காங்குள்ளவர்கள் கூடிக்கூடி ஏதாவது ஒரு முடிவுக்கு வரவேண்டியதும் மிகவும் அவசியமாகும் என்பதை யும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம். 

குடி அரசு - தலையங்கம் - 24.05.1931

 
Read 49 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.